The real gift - உண்மையான பரிசு
ஒரு மிக பெரிய போதகர் ஒரு கூட்டத்தில் ஒரு சாட்சியாய் ஒரு உண்மை கதையை இவ்வாறாக கூறினார். ஒரு ஆவிக்குரிய சபைக்கு போகின்ற வாலிப பெண் ஒரு குறிப்பிட்ட ஊரில் வசித்து வந்தாள். அவள் மிகவும் திறமைசாலி மற்றும் அழகும் கூட. அந்த பெண்ணை ஒரு வாலிபன் நேசித்து வந்தான். அந்த பெண் போகும் போதும் வரும்போது அந்த பெண்ணை பார்க்க நிற்பது, பேச முயற்சிப்பது என தொடர்ந்து அந்த பெண்ணிற்கு தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். ஒரு நாள் அந்த பெண் தன் பின்னே அந்த வாலிபன் வருவதை கண்டு, நின்று தன்னிடம் கிட்ட வருமாறு அழைத்தாள். பதற்றத்துடனே வந்த வாலிபனை நோக்கி எதற்காக என் பின்னே வருகிறாய்? என்னதான் வேண்டும்? என கேட்டாள்.
அந்த வாலிபன், உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றேன். உனக்கு என்ன வேணும் சொல் எதுவேண்டுமானாலும் வாங்கி தருகிறேன். யாரிடம் வேண்டுமானாலும் பேச தயார் என்று கூறினான். உடனே அந்த பெண் சரி எனக்கு ஏதும் வேண்டாம் ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் வேண்டும் அதை மட்டும் வாங்கி கொடுத்து விட்டால், பிறகு நான் உன்னை நேசிக்கிறேன் என்றாள். இதை எதிர் பார்க்காத அவன் என்ன என்ன அது சொல் உடனே வாங்கி தருகிறேன் என்றான். அந்த பெண், சபையில் ஞானஸ்நானம் என்ற ஒன்று உள்ளது. அது வெளியில் எங்கேயும் கிடைக்காது.அதை மட்டும் நீ வாங்கி விடு என்றாள்.ஆனால் அதை வாங்கும் வரை என்னிடம் பேச கூடாது. நானும் உன்னிடம் பேச மாட்டேன் என்றாள். அந்த வாலிபன் ஞாயிறு அன்று சபையில் போதகரிடம் சென்று, ஞானஸ்நானம் எனக்கு கொடுங்கள் எனக்கு வேண்டும். பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்றான். அந்த போதகர் சிரித்த படி, நீ யார் !? பெயர் என்ன என்று எல்லாம் தெரிந்து கொண்டு, தம்பி நீ தொடர்ந்து சபைக்கு வா. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நானே தருகிறேன் என்றார். அந்த வாலிபன் தொடர்ந்து சபைக்கு செல்ல ஆரம்பித்தான். சபையில் அந்த பெண் எங்கு இருக்கிறாள். செய்தி வேளையில் அந்த பெண்ணை மட்டுமே கவனித்து கொண்டு இருந்தான். நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் செல்ல செல்ல அவன் இருதயம் செய்தியை கேட்க விரும்பியது. ஆராதனையில் கண்களை மூடி கர்த்தரோடு பேச ஆரம்பித்தான். அவன் வாலிபர் ஐக்கியம் போன்றவற்றில் கலந்து கொண்டான். இப்பொழுது அவன் சபைக்கு வந்த நோக்கத்தையே மறந்து விட்டு இயேசுவை கிறிஸ்துவை நேசிக்க ஆரம்பித்து, சொந்த இரட்சகராக ஏற்று கொண்டான். இதை அறிந்த போதகர் அவனுக்கு நியானஸ்தானமும் கொடுத்தார். அடுத்த வாரம் சபையில், அந்த பெண்ணை பார்த்தான். அந்த பெண்ணிடம், என்னை மன்னித்து விடு, என் மனம் இப்பொழுது மாறிவிட்டது. எனக்கு உன்னை திருமணம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை.மேலும் இயேசுவை கிறிஸ்தவை எனக்கு உன் மூலமாக அறிந்து கொண்டேன் அதற்காக ரொம்ப நன்றி என்றான். வருத்தமா? என் மீது என்று கேட்டான். அந்த பெண் சிரித்து கொண்டே, எனக்காக உன்னை ஞானஸ்நானம் எல்லாம் எடுக்க கூறவில்லை. என் அன்பை விட, உண்மையான அன்பு ஒன்று உள்ள ஒருவர் உள்ளார். அவரை உனக்கு அறிமுகம் செய்ய தீர்மானித்தேன். நான் உன்னிடம் பேசிய நாளில் இருந்து உனக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. எனக்கு அதீக சந்தோசம் என்றாள். நாட்கள் சென்றன. வருடங்கள் உருண்டோடின.அந்த பெண்ணை குறித்த நினைவு கூட மறந்து போனது. அந்த வாலிபன் மிக பெரிய ஊழியராக மாறினார். அது வேறு யாரும் அல்ல. நான்தான் அந்த வாலிபன் என்று கூறி மிகவும் அழுதார்.
நாமும் கூட ஒரு நபருக்காகவோ அவர்களின் அன்பை பெற நினைத்து சில காரியங்களை கர்த்தருக்காக செய்கின்றோம். இன்றைக்கும் ராகேலுக்காக வேலை செய்யும் யாக்கோப்புகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்த்தர் திருமண வயது ஆவதற்குள் மாமிசமான உலக காரியங்களை அனுமதிக்க மாட்டார். அப்படி ஒரு பெண்ணோ ஆணோ நம்மை நேசிப்பதாகவோ அல்லது நாம் நேசித்தால் அது 100% தேவனுடைய சித்தம் அல்ல. ஜெபித்தால் நான் நேசிக்கும் பெண்ணையோ அல்லது அந்த மகனையோ தேவன் தருவார் என்பது எல்லாம் பொய் உபதேசம். போராடி அடைந்து விடுவோம். ஆனால் வாழ்க்கையில் வேதனை மட்டுமே மிஞ்சும். ஒரு பெண்ணோ ஆணோ நம்மை நேசிக்கிறார்கள் என்று சுலபமாக கண்டு பிடித்து விடலாம்.ஆரம்பத்திலேயே சொல்லி விடவேண்டும். சொல்லாமல் அலைய விடுவது. நான் என்ன செய்வது நான் நேசிக்க கூறினேனா? என்று எல்லாம் கூறுவது சரி அல்ல. இது தவறான சிந்தை. ஒரு வேளை அந்த நபரின் ஆத்துமா உங்கள் மூலமாக ஆத்துமா நரகத்திற்கு சென்றால், அதற்கு கணக்கு ஒப்பு விக்க வேண்டும் மறவாதிருங்கள். அது வெளியில் அல்ல சபையில் கூட இருக்கலாம்.சொல்ல பயமாக இருந்தால் கர்த்தரிடம் மட்டும் கூறுங்கள்.அவர் நேர்த்தியாக விலக்கி விடுவார்.
நம் வருங்கால துணைக்கு நாம் தரும்பெரிய பரிசு நம்முடைய பரிசுத்தமானவாழ்வே!
மாமிசத்தை தூண்டி வரும் எந்த காரியம் ஆனாலும் சரி. ஆசீர்வாதம் ஆனாலும் சரி. அது கர்த்தருடையது அல்ல
கர்த்தருடைய காரியம் என்று வந்தாலே மாமிசம் இருக்காது.
நம்முடைய மாமிசத்தை நாமே சிலுவையில் அறையா விட்டால், நம் மாமிசம் உயிரோடு இருக்கும் வரை பாவம் செய்து கொண்டே இருக்கும்.சிலுவையில் அறைய ஒப்பு கொடுப்போம். கிறிஸ்து நம்மில் வாழ வேண்டும்.
Sis. Meena Juliet
Description: Devotional Tamil Message By Sis. Meena Juliet, The real gift - உண்மையான பரிசு.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Tamil Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Tamil Devotional Message.